यस्मात् मदधीनं कर्मिणां कर्मफलं ज्ञानिनां च ज्ञानफलम् , अतः भक्तियोगेन मां ये सेवंते ते मम प्रसादात् ज्ञानप्राप्तिक्रमेण गुणातीताः मोक्षं गच्छन्ति । किमु वक्तव्यम् आत्मनः तत्त्वमेव सम्यक् विजानन्तः इति अतः भगवान् अर्जुनेन अपृष्टोऽपि आत्मनः तत्त्वं विवक्षुः उवाच ‘ऊर्ध्वमूलम्’ इत्यादिना ।
எதனால் கர்மம் செய்பவர்களுக்கு கர்மபலனும், ஞானிகளுக்கு ஞானபலனும் என்னுடைய அதீனமாக இருக்கிறதோ அதனால் என்னை பக்தியோகத்தால் எவர்கள் சேவிக்கின்றார்களோ அவர்கள் என்னுடைய பிரசாதத்தால் கிரமமாக ஞானம் அடைவதின் வாயிலாக குணங்களைக் கடந்து மோக்ஷத்தை அடைகின்றனர். அவ்வாறு இருக்கையில் ஆத்மதத் துவத்தை நன்றாக அறிந்தவர்களைப் பற்றி கூறவும் வேண்டுமோ? ஆகையால் அர்ஜுனனால் ஆத்மதத்துவத்தைப் பற்றி கேட்கா விட்டாலும் அதைப்பற்றி விளக்குவதற்கு இச்சை உள்ளவராகிக் கூறுகிறார். ஊர்த்வமூலம் முதலிய சுலோகங்களால்.
तत्र तावत् वृक्षरूपककल्पनया वैराग्यहेतोः संसारस्वरूपं वर्णयति विरक्तस्य हि संसारात् भगवत्तत्त्वज्ञाने अधिकारः, न अन्यस्येति —
சம்சாரத்தில் விரக்தி உள்ளவனுக்கே பகவானுடைய தத்வஞா னத்தில் அதிகாரம் மற்றவர்களுக்கு அல்ல என்பதால் மரரூபமாக கல்பனை செய்து வைராக்கியம் ஏற்படுவதற்காக சம்சாரத்தின் ஸ்வரூபத்தை விளக்குகிறார்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறுகிறார்
ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम् ।
छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ॥ १ ॥
ஊர்த்வ மூலமத:சாகமச்வத்தம் ப்ராஹுரவ்யயம் ।
சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத ஸ வேதவித் ॥ 1 ॥
(இந்த சம்சாரரூப விருக்ஷம் = மரம்) அது வேரை மேலே உடை யதாய் இருக்கிறது. காலத்தைக் காட்டிலும் சூட்சுமமாயும், காரணமா யும், நித்யமாயும், மஹத்தாயும், அவ்யக்தமான மாயாசக்தியுடன் கூடிய பிரஹ்மம் வேராய் இருக்கிறது. அந்த சம்சார விருக்ஷத்தின் வேர் மேலே இருக்கிறது. ஆகையால் அது ஊர்த்வமூலம் எனப்படு கிறது. சுருதியிலும் "ஊர்த்வமூல: அவாக்சாக.' = மேலே வேர், கீழே கிளைகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது.
पुराणे च —
புராணங்களிலும்-
‘अव्यक्तमूलप्रभवस्तस्यैवानुग्रहोच्छ्रितः ।
बुद्धिस्कन्धमयश्चैव इन्द्रियान्तरकोटरः ॥
महाभूतविशाखश्च विषयैः पत्रवांस्तथा ।
धर्माधर्मसुपुष्पश्च सुखदुःखफलोदयः ॥
आजीव्यः सर्वभूतानां ब्रह्मवृक्षः सनातनः ।
एतद्ब्रह्मवनं चैव ब्रह्माचरति नित्यशः ॥
एतच्छित्त्वा च भित्त्वा च ज्ञानेन परमासिना ।
ततश्चात्मरतिं प्राप्य तस्मान्नावर्तते पुनः ॥
’इत्यादि ।
பிரஹ்ம விருக்ஷமானது அவ்யக்த ரூப மூலத்திலிருந்து உண் டாகி, அதனுடைய அனுக்கிரஹத்தினால் பெரிதாகி, வளர்ந்து புத்தி ரூபமான பிரதானமாகிய அடிமரமாய் உள்ளது. இந்திரிய துவாரங்களாகிய பொந்துகளையும், மஹாபூதங்களாகிய கிளைக ளையும், விஷயங்களாகிய இலைகளையும், அவ்வாறே புண்ய பாபங்கள் என்கின்ற புஷ்பங்களையும்,சுக துக்கங்களையும் உடை து எல்லா ஜீவர்களும் ஜீவிப்பதற்கு ஆச்ரயமாகிய சனாதன மான ப்ரஹ்மவிருக்ஷமாகும். அதுவே ப்ரஹ்மவனம். இதில் பிரஹ் மம் எப்பொழுதும் இருக்கிறது. இவ்வாறு உள்ள பிரஹ்ம விரு க்ஷத்தை ஞானமென்கிற(வலிமையான) உத்தமமான கத்தியினால் வெட்டிப்பிளந்து அதனால் ஆத்மானந்தத்தைப் பெற்றவன் மறுப டியும் திரும்புவதில்லை என்று விளக்கப்பட்டுள்ளது.
तम् ऊर्ध्वमूलं संसारं मायामयं वृक्षम् अधःशाखं महदहङ्कारतन्मात्रादयः शाखा इव अस्य अधः भवन्तीति सोऽयं अधःशाखः, तम् अधःशाखम् न श्वोऽपि स्थाता इति अश्वत्थः तं क्षणप्रध्वंसिनम् अश्वत्थं प्राहुः कथयन्ति अव्ययं।
அந்த மாயாமயமான சம்சாரத்தை மேலே வேர் உடைய விருக்ஷமாகவும், மஹத், அஹங்காரம், தன்மாத்திரைகள் முதலிய வைகள் கிளைகளைப் போல கீழே இருக்கின்றன. கீழே கிளை களை உடையது அத: சாக: எனப்படுவது, நாளை வரைக்கும் கூட இருக்காதது. மேலும் உடனே நாசம் அடைவது. ஆகையால் அதை அச்வத்தம் எனவும், அவ்யயம் எனவும் கூறுகிறார்கள்.
संसारमायायाः अनादिकालप्रवृत्तत्वात् सोऽयं संसारवृक्षः अव्ययः, अनाद्यन्तदेहादिसन्तानाश्रयः हि सुप्रसिद्धः, तम् अव्ययम् ।
இந்த மாயாமயமான சம்சாரம் அநாதிகாலமாக பிரவிர்த்தித் துக்கொண்டு இருப்பதால் இந்த சம்சார விருக்ஷம் அவ்யயம் எனப்படுகிறது.
तस्यैव संसारवृक्षस्य इदम् अन्यत् विशेषणम् ।
அவ்வாறே ஆதியும், முடிவும் இல்லாத இந்த சரீரம் முதலிய வைகளின் பரம்பரையை (தொடர்ச்சியை) சார்ந்து இருப்பது பிரசித்தமாகும். ஆகையால் இதை அவ்யயம் என்கிறோம்.
छन्दांसि यस्य पर्णानि, छन्दांसि च्छादनात् ऋग्यजुःसामलक्षणानि यस्य संसारवृक्षस्य पर्णानीव पर्णानि । यथा वृक्षस्य परिरक्षणार्थानि पर्णानि, तथा वेदाः संसारवृक्षपरिरक्षणार्थाः, धर्माधर्मतद्धेतुफलप्रदर्शनार्थत्वात् ।
சந்தஸ்கள் எதற்கு இலைகள் போலவோ, ரிக், யஜுர், சாமவே தங்கள் சம்சார விருக்ஷத்தை இலைகள் போல் பாதுகாப்பதினால் அவைகள் சம்சாரவிருக்ஷத்திற்கு இலைகள் எவ்வாறு விரு க்ஷத்தை இலைகள் ரக்ஷி க்கிறதோ அவ்வாறு வேதங்கள் புண்ய பாப பலன்களின் காரணமாகிய கர்மங்கள் அதன் பலன்கள் இவை களைக் குறித்து விளக்குவதால் (பிரகாசப்படுத்துவதால்) சம்சார ரூப விருக்ஷத்தை ரக்ஷிக்கின்றன.
यथाव्याख्यातं संसारवृक्षं समूलं यः तं वेद सः वेदवित् , वेदार्थवित् इत्यर्थः ।
வேருடன் சம்சார விருக்ஷத்தை வியாக்யானம் செய்யப்பட்ட வாறு எவன் அறிகிறானோ அவன் வேதத்தின் அர்த்தத்தை அறிந் தவன் என்பது பொருள்.
न हि समूलात् संसारवृक्षात् अस्मात् ज्ञेयः अन्यः अणुमात्रोऽपि अवशिष्टः अस्ति इत्यतः सर्वज्ञः सर्ववेदार्थविदिति समूलसंसारवृक्षज्ञानं स्तौति ॥ १ ॥
இந்த மூலத்துடன் கூடிய சம்சாரத்தைக் காட்டிலும் அறிய வேண்டிய பொருள் அணுமாத்திரமும் இல்லை. ஆதலால் எவன் வேதார்தத்தை அறிந்தவனோ அவன் சர்வக்ஞன் என்று மூலத்து டன் கூடிய விருக்ஷத்தின் ஞானத்தை புகழ்கிறார்.
तस्य एतस्य संसारवृक्षस्य अपरा अवयवकल्पना उच्यते —
அந்த சம்சார விருக்ஷத்திற்கே வேறு அவயவங்களைக் கற்பனை செய்து கூறுகிறார்.
अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः ।
अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥ २ ॥
அதஸ் சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய சாகா குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா: ।
அதஸ்ச மூலான்யனு சந்ததானி கர்மானுபந்தீனி மனுஷ்ய லோகே ॥ 2 ॥
अधः मनुष्यादिभ्यो यावत् स्थावरम् ऊर्ध्वं च यावत् ब्रह्मणः विश्वसृजो धाम इत्येतदन्तं यथाकर्म यथाश्रुतं ज्ञानकर्मफलानि, तस्य वृक्षस्य शाखा इव शाखाः प्रसृताः प्रगताः, गुणप्रवृद्धाः गुणैः सत्त्वरजस्तमोभिः प्रवृद्धाः स्थूलीकृताः उपादानभूतैः, विषयप्रवालाः विषयाः शब्दादयः प्रवालाः इव देहादिकर्मफलेभ्यः शाखाभ्यः अङ्कुरीभवन्तीव, तेन विषयप्रवालाः शाखाः ।
கீழே என்பது மனிதர்கள் ஆரம்பித்து ஸ்தாவரம் வரையிலும் ஆகும். மேலே என்பது மனிதனில் ஆரம்பித்து பிரபஞ்சத்தை யும், தர்மத்தையும் படைத்த பிரஹ்மா வரையிலும் கர்மத்திற்குத் தக்கவாறு, ஞானத்திற்குத் தக்கவாறு உண்டான ஞானகர்ம பலன் கள் அந்த விருக்ஷத்திற்கு கிளைபோல் விரிந்து நிற்கின்றன. சத்து வ, ரஜஸ், தமோ குணங்களால் ஸ்தூலமாக்கப்பட்ட உபாதான (பூ தங்களால்) காரணத்தால் சப்தம் முதலிய விஷயங்கள் துளிர்கள் போல் தங்களுடைய கர்மபலன்களாகிய தேஹாதி கிளைகளில் தோன்றுகின்றன. ஆகையால் விஷயங்கள் என்கின்ற துளிர்கள் உள்ளவைகளாக கிளைகள் இருக்கின்றன.
संसारवृक्षस्य परममूलं उपादानकारणं पूर्वम् उक्तम् । अथ इदानीं कर्मफलजनितरागद्वेषादिवासनाः मूलानीव धर्माधर्मप्रवृत्तिकारणानि अवान्तरभावीनि तानि अधश्च देवाद्यपेक्षया मूलानि अनुसन्ततानि अनुप्रविष्टानि कर्मानुबन्धीनि कर्म धर्माधर्मलक्षणम् अनुबन्धः पश्चाद्भावि, येषाम् उद्भूतिम् अनु उद्भवति, तानि कर्मानुबन्धीनि मनुष्यलोके विशेषतः । अत्र हि मनुष्याणां कर्माधिकारः प्रसिद्धः ॥ २ ॥
சம்சார விருக்ஷத்திற்கு முதல் (உபாதன) காரணம் ஆணிவேர் என்று முன்பு கூறப்பட்டது. இப்பொழுது கர்மபலத்தினால் உண்டா கின்றராக, த்வேஷ வாசனைகள் புண்ய, பாபங்களில் பிரவிர்த்திப் பதற்குக் காரணமாக இடையில் தோன்றும் வேர்கள் போல் கூறப்ப டுகிறது. தேவர்கள் முதலானோரைக் காட்டிலும், கீழே உள்ள மனித உலகத்தில் அந்த வேர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பி ணைந்து தர்மாதர்ம லக்ஷணங்களுடைய கர்மத்தில் பந்தப்படுத்து கிறது. பின்னால் தோன்றும் கர்மபலன் வெளிப்படும்பொழுது அனுபவத்தால் கர்மானுபந்தம் எனப்படுகிறது. (கர்மத்தில் பந்தப்ப டுகிறான் என்பது) விசேஷமாக உலகில் மனிதர்களுக்கு கர்மத்தில் அதிகாரம் என்பது பிரசித்தம்.
यस्तु अयं वर्णितः संसारवृक्षः —
எந்த இந்த சம்சாரவிருக்ஷம் வர்ணிக்கப்பட்டதோ அந்த-
न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा ।
अश्वत्थमेनं सुविरूढमूलमसङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ॥ ३ ॥
ந ரூபமஸ் யேஹ ததோபலப்யதே நாந்தோந சாதிர்ன ச ஸம்ப் ரதிஷ்டா ।
அச்வத்தமேனம் ஸுவிரூடமூலம ஸங்கசஸ்த்ரேண த்ரு டேன சித்வா ॥ 3 ॥
न रूपम् अस्य इह यथा उपवर्णितं तथा नैव उपलभ्यते, स्वप्नमरीच्युदकमायागन्धर्वनगरसमत्वात् ; दृष्टनष्टस्वरूपो हि स इति अत एव न अन्तः न पर्यन्तः निष्ठा परिसमाप्तिर्वा विद्यते ।
அதனுடைய ஸ்வரூபம் எவ்வாறு வர்ணிக்கப்பட்டதோ அவ் வாறு காணப்படவில்லை. ஏன் எனில் ஸ்வப்னவஸ்து போலும், கானல் நீர் போலும், மாயையினால் உண்டாக்கப்பட்ட கந்தர்வ பட் டணம் போலும் பார்த்துகொண்டிருக்கும் பொழுதே இல்லாமல் போய்விடும். (நாசம் அடையும்) ஸ்வபாவமுடையது. (சம்சார விரு க்ஷம் அநாதியாய் இருப்பதால்) அதற்கு எல்லையும், முடிவும் கிடையாது. (ஞானத்தினால் மட்டுமே முடிவு).
तथा न च आदिः, ‘इतः आरभ्य अयं प्रवृत्तः’ इति न केनचित् गम्यते । न च सम्प्रतिष्ठा स्थितिः मध्यम् अस्य न केनचित् उपलभ्यते ।
அவ்வாறே அதற்கு ஆதியும் கிடையாது. ஏன் எனில் இந்த சம்சாரம் எப்பொழுது ஆரம்பமானது என்று ஒருவராலும் அறிய முடியாது. அவ்வாறே அது நடுவில் இருப்பதாக ஒருவராலும் அறியமுடியாது.
अश्वत्थम् एनं यथोक्तं सुविरूढमूलं सुष्ठु विरूढानि विरोहं गतानि सुदृढानि मूलानि यस्य तम् एनं सुविरूढमूलम् , असङ्गशस्त्रेण असङ्गः पुत्रवित्तलोकैषणाभ्यः व्युत्थानं तेन असङ्गशस्त्रेण दृढेन परमात्माभिमुख्यनिश्चयदृढीकृतेन पुनः पुनः विवेकाभ्यासाश्मनिशितेन च्छित्वा संसारवृक्षं सबीजम् उद्धृत्य ॥ ३ ॥
திடமாக நன்றாக வேரூன்றிய இந்த அச்வத்தமரத்தை புத்ர, செல்வம், லோகம் என்ற மூன்று ஆசைகள் நீங்கிய அசங்க சஸ்தி ரத்தினாலும் பரமாத்மாவிடத்தில் திரும்பிய நிச்சயமாக திடமாக் கப்பட்ட திருப்பி திருப்பி திடமாக்கப்பட்ட விவேக அப்யாசத்தால் கூர்மையாக்கப்பட்ட கத்தியால் வெட்டப்பட்டு அடியோடு எடுத்து
ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गता न निवर्तन्ति भूयः ।
तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी ॥ ४ ॥
தத: பதம் தத்பரிமார்கிதவ்யம் யஸ்மின்கதா ந நிவர்தந்தி பூய: ।
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ ॥ 4 ॥
ततः पश्चात् यत् पदं वैष्णवं तत् परिमार्गितव्यम् , परिमार्गणम् अन्वेषणं ज्ञातव्यमित्यर्थः । यस्मिन् पदे गताः प्रविष्टाः न निवर्तन्ति न आवर्तन्ते भूयः पुनः संसाराय ।
அதன்பிறகு வைஷ்ணவ பதத்தை (மோக்ஷத்தை) தேட வேண்டும். அதாவது அறியவேண்டும் என்பது பொருள். எந்த பதத்தை அடைந்து திரும்பவும் (மறுபடியும்) சம்சார சக்கிரத்தில் சுழலமாட்டார்களோ அதை அடைவார்கள். அதாவது மறுபடியும் பிறக்கமாட்டார்கள்.
कथं परिमार्गितव्यमिति आह —
எவ்வாறு அதைத் தேடவேண்டும் என்பதைக் கூறுகிறார்.
तमेव च यः पदशब्देन उक्तः आद्यम् आदौ भवम् आद्यं पुरुषं प्रपद्ये इत्येवं परिमार्गितव्यं तच्छरणतया इत्यर्थः ।
அவனையே என்று தம் ஏவ ச என்ற பதத்தினால் கூறப்பட்டது. அந்த ஆதி புருஷனை சரணமடைந்து தேடவேண்டும் என்பது பொருள்.
कः असौ पुरुषः इति, उच्यते —
அந்த புருஷன் யார் என்பதைக் கூறுகிறேன்-
यतः यस्मात् पुरुषात् संसारमायावृक्षप्रवृत्तिः प्रसृता निःसृता, ऐन्द्रजालिकादिव माया, पुराणी चिरन्तनी ॥ ४ ॥
எந்த புருஷனிடமிருந்து மாயாஜாலக்காரனுடைய மாயை போல மாயையினால் சம்சார விருக்ஷமானது சனாதனமாக பிரவி ருத்தியானது வெளிப்பட்டதோ அவனே அந்த புருஷன்.
कथम्भूताः तत् पदं गच्छन्तीति, उच्यते —
எப்படிப்பட்டவர்கள் அந்த பதத்தை அடைகிறார்கள் என்ப தைக் கூறுகிறார்-
निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥ ५ ॥
நிர்மானமோஹா ஜிதஸங்கதோஷா அத்யாத்மநித்யா விநிவ் ருத்தக்காமா: ।
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகதுக்கஸம்ஞைர்கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத் ॥ 5 ॥
निर्मानमोहाः मानश्च मोहश्च मानमोहौ, तौ निर्गतौ येभ्यः ते निर्मानमोहाः मानमोहवर्जिताः । जितसङ्गदोषाः सङ्ग एव दोषः सङ्गदोषः, जितः सङ्गदोषः यैः ते जितसङ्गदोषाः । अध्यात्मनित्याः परमात्मस्वरूपालोचननित्याः तत्पराः । विनिवृत्तकामाः विशेषतो निर्लेपेन निवृत्ताः कामाः येषां ते विनिवृत्तकामाः यतयः संन्यासिनः द्वन्द्वैः प्रियाप्रियादिभिः विमुक्ताः सुखदुःखसंज्ञैः परित्यक्ताः गच्छन्ति अमूढाः मोहवर्जिताः पदम् अव्ययं तत् यथोक्तम् ॥ ५ ॥
மானம், மோஹத்திலிருந்து விடுபட்டவர்கள் என்றால் அபிமானமும் அக்ஞானமும் எவர்களுக்கு நஷ்டமாகிவிட்டதோ அவர்கள். = நிர்மானமோஹா: எவர்கள் பற்று அற்று இருக்கிறார் களோ அவர்கள் பற்றைஜெயித்தவர்கள் = ஜிதசங்கதோஷா:, பர மாத்ம ஸ்வரூபத்தைப் பற்றியே எப்பொழுதும் அந்த பரமாகவே இருப்பவர்கள் அத்யாத்மநித்யா:, எவர்களுக்கு எல்லாக்காமனைக ளும் மூலத்துடன் நிவிர்த்தி ஆகிவிட்டதோ அவர்கள் நிவிர்த்த காமா:, சந்நியாசிகள் பிரியம், அப்ரியம் இவைகளிலிருந்து விடு பட்டவர்கள். சுகதுக்கம் என்பவைகளிலிருந்தும் விடுபட்டு மோஹ மற்றவர்களாகி நாசமற்றபதத்தை முன்பு கூறியவாறு அடைகிறார்கள்.
तदेव पदं पुनः विशेष्यते —
மறுபடியும் அந்தப் பதத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார்.
न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः ।
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ ६ ॥
ந தத் பாஸயதே ஸூர்யோ ந சசாங்கோ ந பாவக: ।
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம ॥ 6 ॥
तत् धाम इति व्यवहितेन धाम्ना सम्बध्यते ।
தத் சப்தத்திற்கு பின் வரும் தாம என்ற சப்தம் வியவதானத்து டன் கூடி தாம என்றசப்தத்துடன் கூடி சம்பந்தமாகும்.
तत् धाम तेजोरूपं पदं न भासयते सूर्यः आदित्यः सर्वावभासनशक्तिमत्त्वेऽपि सति । तथा न शशाङ्कः चन्द्रः, न पावकः न अग्निरपि ।
சூரியன் எல்லாவற்றையும் விளக்கும் (பிரகாசிக்கும்) சக்தி படைத்ததாய் இருந்தாலும், தேஜோஸ்வரூபமான பதத்தை (தாமத்தை) விளக்கமுடியாது(பிரகாசிக்கச் செய்யமுடியாது) அவ்வாறே சந்திரனாலும், அக்கினியினாலும் முடியாது.
यत् धाम वैष्णवं पदं गत्वा प्राप्य न निवर्तन्ते, यच्च सूर्यादिः न भासयते, तत् धाम पदं परमं विष्णोः मम पदम् , ॥ ६ ॥
எந்த பரமபதமாகிய வைஷ்ணவ பதத்தை அடைந்து மறுபடி யும் திரும்புவதில்லையோ, எந்த பதத்தை சூரியன் முதலியவைக ளாலும் பிரகாசிக்கச் செய்ய முடியவில்லையோ அந்தபதம் விஷ் ணுவாகிய என்னுடையது.
यत् गत्वा न निवर्तन्ते इत्युक्तम्ननु सर्वा हि गतिः आगत्यन्ता, ‘संयोगाः विप्रयोगान्ताः’ इति प्रसिद्धम् । कथम् उच्यते ‘तत् धाम गतानां नास्ति निवृत्तिः’ इति ।
"யத் கத்வா ந நிவர்தந்தே” = எதை அடைந்து திரும்புவதில் லையோ, ) என்று கூறப்பட்டது. ஆனால் எல்லா செல்லுதலும் திரும்புதலை உடையதாய் இருக்கிறது. அவ்வாறே ஒன்று சேர்ந்த தெல்லாம் பிரிதலை உடையதாய் இருக்கிறது என்பது பிரசித்தம். அப்படி இருக்கும்பொழுது அந்த பதத்தை அடைந்தவர்கள் திரும்புவதில்லை என்று எவ்வாறு கூறப்படுகிறது என்பதற்கு
शृणु तत्र कारणम् —
அதன் காரணத்தைக் கேள்
ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः ।
मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ॥ ७ ॥
மமைவாம்சோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதன: ।
மன: ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தானி கர்ஷதி ॥ 7 ॥
ममैव परमात्मनः नारायणस्य, अंशः भागः अवयवः एकदेशः इति अनर्थान्तरं जिवलोके जीवानां लोके संसारे जीवभूतः कर्ता भोक्ता इति प्रसिद्धः सनातनः ।
ஜீவ லோகம் என்னும் சம்சாரத்தில் ஜீவனாக இருந்து கொண்டு கர்த்தா போக்தா என்று பிரசித்தமாய் இருக்கிறது. அது என்னுடைய பரமார்த்த ஸ்வரூபத்தில் சனாதன அம்சமாக இருக்கி றது. அதை பாகம், அவயவம், ஏகதேசம் (ஓர் இடத்தில் எப்பொழு தாவது இருத்தல்) இவை எல்லாம் ஒரு பொருளைக் குறிப்பதாகும்.
चिरन्तनः ; यथा जलसूर्यकः सूर्यांशः जलनिमित्तापाये सूर्यमेव गत्वा न निवर्तते च तेनैव आत्मना गच्छति, एवमेव ।
எவ்வாறு ஜலத்தில் பிரதிபிம்பித்த சூரியன் சூரியனின் அம்ச மாக இருந்துகொண்டு ஜலரூபமான நிமித்தம் நாசமானபொழுது சூரியனை அடைந்து மறுபடியும் திரும்புவதில்லையோ அவ் வாறே இந்த (ஜீவனாகிய அம்சமும் அந்த பரமாத்மாவையே சென்றடைகிறது.
அல்லது எவ்வாறு கடம் முதலியவைகளால் பரிச்சின்னமான கடம் முதலிய ஆகாசங்கள் ஆகாச அம்சமாக இருந்துகொண்டு கடம் முதலிய நிமித்தங்கள் நாசமடைந்தபொழுது ஆகாசத்தை அடைந்து திரும்புவதில்லையோ, அவ்வாறே ஜீவனும் பரமாத் மாவை அடைந்து மீண்டும் திரும்புவதில்லை என்றால் பரப்ரஹ்ம ஸ்வரூபமாகவே இருக்கிறது என்பது யத்கத்வா ந நிவர்த்தந்தே என்று கூறப்பட்டுள்ளது.
ननु निरवयवस्य परमात्मनः कुतः अवयवः एकदेशः अंशः इति ? सावयवत्वे च विनाशप्रसङ्गः अवयवविभागात् ।
அவயவமற்றபரமாத்மாவிற்கு அவயவம், ஏகதேசம், அம்சம் என்று எவ்வாறு ஏற்படும்? இவ்வாறு பரமாத்மாவிற்கு அவய வத்தை ஒப்புக்கொண்டால் அதற்கு விபாகங்கள் இருப்பதால் அதற்கு நாசத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமெனில்,
नैष दोषः, अविद्याकृतोपाधिपरिच्छिन्नः एकदेशः अंश इव कल्पितो यतः । दर्शितश्च अयमर्थः क्षेत्राध्याये विस्तरशः ।
இந்த தோஷமே கிடையாது. ஏன் எனில் அவித்யையினால் உண்டான உபாதிகளால் பரிச்சின்னமான ஏகதேச அம்சம் போல கல்பிக்கப்படுவதால் இந்த தோஷமே கிடையாது. இங்கு விளக்கப் பட்ட இந்த அர்த்தமானது க்ஷேத்ர அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்படும்.
स च जीवो मदंशत्वेन कल्पितः कथं संसरति उत्क्रामति च इति, उच्यते —
அந்த ஜீவன் என்னுடைய அம்சமாக கல்பிக்கப்பட்டு எவ் வாறு வாழ்கிறான்? எவ்வாறு சரீரத்தை விட்டு செல்கிறான்? என்ப தைக் கூறுகிறேன்.
मनःषष्ठानि इन्द्रियाणि श्रोत्रादीनि प्रकृतिस्थानि स्वस्थाने कर्णशष्कुल्यादौ प्रकृतौ स्थितानि कर्षति आकर्षति ॥ ७ ॥
மனதை ஆறாவது இந்திரியமாகக்கொண்டு செவி முதலிய இந்திரியங்களை தன், தன் ஸ்தானங்களில் அதாவது தனது கோல கரூப பிரக்ருதியில் இருந்து (ஜீவன்) இழுத்துச் செல்கின்றது.
कस्मिन् काले ? —
எப்பொழுது (இழுத்துச்செல்கிறது)
शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः ।
गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानिवाशयात् ॥ ८ ॥
சரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீச்வர: ।
க்ருஹீத்வைதானி ஸம்யாதி வாயுர் கந்தாநிவாசயாத் ॥ 8 ॥
यच्चापि यदा चापि उत्क्रामति ईश्वरः देहादिसङ्घातस्वामी जीवः, तदा ‘कर्षति’ इति श्लोकस्य द्वितीयपादः अर्थवशात् प्राथम्येन सम्बध्यते ।
எப்பொழுது தேஹாதிகளுடன் கூடிய சுவாமியாகிய ஜீவன் எப்பொழுது சரீரத்தை விட்டு கிளம்புகிறானோ அப்பொழுது கவர்ந்து இழுத்துச் செல்கிறான் என்பதை ஸ்லோகத்தின் இரண்டாம் பாதத்தின் அர்த்தத்தின் வசத்தால் முதலில் சேர்க்கப் படுகிறது.
यदा च पूर्वस्मात् शरीरात् शरीरान्तरम् अवाप्नोति तदा गृहीत्वा एतानि मनःषष्ठानि इन्द्रियाणि संयाति सम्यक् याति गच्छति ।
எப்பொழுது ஜீவாத்மா முதல் சரீரத்திலிருந்து மற்றொரு சரீரத்தை அடைகிறதோ அப்பொழுது மனதுடன் கூடிய ஆறு இந்திரியங்களையும் உடன் எடுத்து செல்கிறது.
किमिव इति, आह — वायुः पवनः गन्धानिव आशयात् पुष्पादेः ॥ ८ ॥
எவ்வாறு எடுத்துச் செல்கிறது எனில் கூறுகிறார். எவ்வாறு காற்றானது வாசனையுள்ள பூக்களிலிருந்து வாசனையை எடுத்துச் செல்கிறதோ அவ்வாறு எடுத்துச் செல்கிறது.
कानि पुनः तानि —
மேலும் அவைகள் எவை?
श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च ।
अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते ॥ ९ ॥
ச்ரோத்ரம் சக்ஷ: ஸ்பர்சனம் ச ரஸனம் க்ராணமேவ ச ।
அதிஷ்டாய மநச் சாயம் விஷயாநுப ஸே வதே ॥ 9 ॥
श्रोत्रं चक्षुः स्पर्शनं च त्वगिन्द्रियं रसनं घ्राणमेव च मनश्च षष्ठं प्रत्येकम् इन्द्रियेण सह, अधिष्ठाय देहस्थः विषयान् शब्दादीन् उपसेवते ॥ ९ ॥
செவி, கண், ஸ்பர்சனம் செய்யும் தோல் இந்திரியம், ருசிக்கும் நாக்கு, மூக்கு, மனம் ஆகிய ஆறு இந்திரியங்களும் தேஹத்தில் இருந்துகொண்டு தன், தன் இந்திரியத்துடன் சேர்ந்து சப்தாதி விஷ யங்களைக் கிரஹிக்கிறது.
एवं देहगतं देहात् —
இவ்வாறு சரீரம் உள்ளவன் சரீரத்திலிருந்து—
उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम् ।
विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः ॥ १० ॥
உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஞானம் வா குணான்விதம் ।
விமூடா நானு பச்யந்தி பச்யந்தி ஞான சக்ஷு ஷ: ॥ 10 ॥
उत्क्रामन्तं देहं पूर्वोपात्तं परित्यजन्तं स्थितं वापि देहे तिष्ठन्तं भुञ्जानं वा शब्दादींश्च उपलभमानं गुणान्वितं सुखदुःखमोहाद्यैः गुणैः अन्वितम् अनुगतं संयुक्तमित्यर्थः । एवंभूतमपि एनम् अत्यन्तदर्शनगोचरप्राप्तं विमूढाः दृष्टादृष्टविषयभोगबलाकृष्टचेतस्तया अनेकधा मूढाः न अनुपश्यन्ति — अहो कष्टं वर्तते इति अनुक्रोशति च भगवान् ।
முன்பு எடுத்த சரீரத்தை விடுபவனாயும், இச்சரீரத்தில் இருப்ப வனாயும், சப்த முதலிய விஷயங்களை அறிபவனாயும், சுகம், துக்கம், மோஹம் எனப்படுகின்றகுணங்களுடன் கூடியவனாயும் இருக்கிறான் என்பது பொருள். இவ்வாறு நன்றாக அறியப்பட்ட தாய் இருந்தாலும், திருஷ்டாதிருஷ்டவிஷய போகங்களின் பலத் தினால் இழுக்கப்பட்ட மனத்தினனாய் பலவாறாக மயங்கிய மூடர் கள் அதை அறிவதில்லை. ஆகையால் பகவான் என்ன கஷ்ட்டம் என்று கருணை காட்டுகிறார்.
ये तु पुनः प्रमाणजनितज्ञानचक्षुषः ते एनं पश्यन्ति ज्ञानचक्षुषः विविक्तदृष्टयः इत्यर्थः ॥ १० ॥
மேலும் எவர் பிரமாணத்தினால் உண்டான ஞானக்கண் உடையவர்களோ அதை விவேகதிருஷ்ட்டியினால் அறிவார்கள்.
केचित्तु —
மேலும் சிலர்
यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।
यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ॥ ११ ॥
யதந்தோ யோகினஸ்சைநம் பச்யந்த்யாத்ம ந்யவஸ்திதம் ।
யதந்தோ(அ)ப்யக்ருதாத்மானோ நைநம் பச்யந்த்ய சேதஸ்: ॥ 11 ॥
यतन्तः प्रयत्नं कुर्वन्तः योगिनश्च समाहितचित्ताः एनं प्रकृतम् आत्मानं पश्यन्ति ‘अयम् अहम् अस्मि’ इति उपलभन्ते आत्मनि स्वस्यां बुद्धौ अवस्थितम् ।
பிரயத்னம் செய்பவர்களாய் ஒருநிலைப்படுத்திய சித்தம் உடைய யோகிகள் இப்பொழுது விளக்கப்பட்ட ஆத்மாவை தன்னுடைய அந்தக்கரணத்தில் அதுவாய் இருக்கிறேன் என்று சா க்ஷாத்காரம் செய்கிறார்கள்.
यतन्तोऽपि शास्त्रादिप्रमाणैः, अकृतात्मानः असंस्कृतात्मानः तपसा इन्द्रियजयेन च, दुश्चरितात् अनुपरताः, अशान्तदर्पाः, प्रयत्नं कुर्वन्तोऽपि न एवं पश्यन्ति अचेतसः अविवेकिनः ॥ ११ ॥
ஆனால் எவன் ஒருவனுக்கு தவம், இந்திரிய கட்டுப்பாடு முதலிய சாதனங்கள் மூலமாக தன்னுடைய அந்தக்கரண சுத்தி ஏற்படவில்லையோ,அவ்வாறே தீயவழிகளில் செல்லுவதிலிருந்து விடுபடவில்லையோ, சாந்தமற்றவராயும், செருக்கு உள்ளவராயும் உள்ளவரோ அந்த அவிவேகி புருஷன் சாஸ்திர ப்ரமாணங்களில் பிரயத்னம் உடையவனாய் இருந்தாலும் அவன் ஆத்மாவை அறிவதில்லை.
यत् पदं सर्वस्य अवभासकमपि अग्न्यादित्यादिकं ज्योतिः न अवभासयते, यत् प्राप्ताश्च मुमुक्षवः पुनः संसाराभिमुखाः न निवर्तन्ते, यस्य च पदस्य उपाधिभेदम् अनुविधीयमानाः जीवाः घटाकाशादयः इव आकाशस्य — अंशाः, तस्य पदस्य सर्वात्मत्वं सर्वव्यवहारास्पदत्वं च विवक्षुः चतुर्भिः श्लोकैः विभूतिसङ्क्षेपमाह भगवान् —
எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் அக்னி, சூரியன் முத லிய ஜ்யோதிகள் பரமாத்மாவை பிரகாசிக்கச் செய்யமுடியாது. எதை அடைந்து முமூக்ஷக்கள் மறுபடியும் சம்சாரத்தை நோக்கி திரும்புவதில்லையோ அந்த பதத்தினுடைய உபாதி பேதத்தினால் கடாகாசம் முதலியவைகள் ஆகாசத்தின் அம்சமாக இருப்பது போல் ஜீவன் (அம்சமாக) பின்னமாக இருக்கிறது. அந்த பதத்தினு டைய சர்வாத்மத்வத்தையும், எல்லா வியவஹாரங்களின் ஆதரத் துவத்தையும் விளக்குவதற்கு இச்சித்தவராகி பகவான் வரும் நான்கு ஸ்லோகங்களில் விபூதிகளை சுருக்கமாகக் கூறுகிறார்.
यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।
यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥ १२ ॥
யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதே(அ)கிலம் ।
யச்சந்த்ரமஸியச்சாக்னௌ தத்தேஜோ வித்தி மாமகம் ॥ 12 ॥
यत् आदित्यगतम् आदित्याश्रयम् । किं तत् ? तेजः दीप्तिः प्रकाशः जगत् भासयते प्रकाशयति अखिलं समस्तम् ; यत् चन्द्रमसि शशभृति तेजः अवभासकं वर्तते, यच्च अग्नौ हुतवहे, तत् तेजः विद्धि विजानीहि मामकं मदीयं मम विष्णोः तत् ज्योतिः ।
சூரியன் எதை ஆசிரயித்து இந்த ஜகத் முழுவதையும் பிரகா சிக்கச் செய்கின்றது. எது சந்திரன் முதலியைைவகளிலும் அக் கினியிலும் இருக்கிறதோ அது தேஜஸ் ஆகும். அந்த தேஜஸ் விஷ்ணுவாகிய என்னுடைய ஜ்யோதி என்று அறி.
अथवा, आदित्यगतं तेजः चैतन्यात्मकं ज्योतिः, यच्चन्द्रमसि, यच्च अग्नौ वर्तते तत् तेजः विद्धि मामकं मदीयं मम विष्णोः तत् ज्योतिः ।
அல்லது சூரியனிடத்தில் இருக்கும் தேஜஸ் எனப்படும் சைதன்யாத்மகமான ஜ்யோதியானது எதுவோ அது சந்திரனிடத் திலும், அக்னியிலும் இருக்கிறது. அந்த தேஜஸ் விஷ்ணுவாகிய என்னுடைய ஜ்யோதி என்று அறி.
ननु स्थावरेषु जङ्गमेषु च तत् समानं चैतन्यात्मकं ज्योतिः । तत्र कथम् इदं विशेषणम् — ‘यदादित्यगतम्’ इत्यादि ।
ஆனால் இந்த சைதன்ய மயமான ஜ்யோதி சராசரமான எல்லா பொருள்களிலும் சமானமாக இருக்கிறது எனில் எதற்காக விசேஷமாக சூரியனிடத்தில் இருக்கும் ஜ்யோதி என்பது முதலிய வைகளால் கூறப்படுகிறது.
नैष दोषः, सत्त्वाधिक्यात् आविस्तरत्वोपपत्तेः । आदित्यादिषु हि सत्त्वं अत्यन्तप्रकाशम् अत्यन्तभास्वरम् ; अतः तत्रैव आविस्तरं ज्योतिः इति तत् विशिष्यते, न तु तत्रैव तत् अधिकमिति ।
இது தோஷம் இல்லை. ஏனெனில் சத்துவகுணம் அதிகமாக இருக்குமிடத்தில் (ஜ்யோதி) அதிகமாகப் புலப்படுகிறது. சூரியன் முதலியவைகளிடத்தில் சத்துவகுணம் அதிகமாக இருப்பதால் அதிகமாக வெளிப்படுகிறது. அதிகமாக ஸ்வச்சமாயிருக்கிறது. அவைகளிடத்தில் (பிரஹ்ம்ம) ஜோதி மிகவும் பிரத்யக்ஷமாக புலப்படுகிறதினால் அதற்கு விசேஷத் தன்மை கூறப்படுகிறது. ஆதித்யாதிகளிடத்தில் ஜ்யோதி அதிகமாக இருக்கிறது என்பது அல்ல. (சமானமாகவே எங்கும் இருக்கிறது)
यथा हि श्लोके तुल्येऽपि मुखसंस्थाने न काष्ठकुड्यादौ मुखम् आविर्भवति, आदर्शादौ तु स्वच्छे स्वच्छतरे च तारतम्येन आविर्भवति ; तद्वत् ॥ १२ ॥
எவ்வாறு உலகில் முகமானது சமானமாக இருந்தபோதிலும் கட்டை, சுவர் முதலியவைகளில் தோன்றாது. ஆனால் ஸ்வச்சமாக வும், அதிக ஸ்வச்சமாகவும் உள்ள கண்ணாடிகளில் (முகமானது) அதற்கேற்றவாறு தெளிவாகவோ, மிகத்தெளிவாகவோ தோன்றுகி றது போல் ஆகும்.
किञ्च —
மேலும்
गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥ १३ ॥
காமாவிச்ய ச பூதானி தாரயாம் யஹ மோஜஸா ।
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: ॥ 13 ॥
गां पृथिवीम् आविश्य प्रविश्य धारयामि भूतानि जगत् अहम् ओजसा बलेन ; यत् बलं कामरागविवर्जितम् ऐश्वरं रूपं जगद्विधारणाय पृथिव्याम् आविष्टं येन पृथिवी गुर्वी न अधः पतति न विदीर्यते च ।
நான் பூமியில் பிரவேசித்து எனது வலிமையினால் இந்த பிர பஞ்சத்தைத் தாங்குகிறேன். அந்த பலமானது காமம், ராகம் அற்றஐஸ்வர்யம் அது ஜகத்தைத் தாங்குவதற்காக பூமியில் நுழைந்து உள்ளதால் பூமியானது கீழே விழுவதோ, உதிர்வதோ இல்லை.
तथा च मन्त्रवर्णः — ‘येन द्यौरुग्रा पृथिवी च दृढा’ (तै. सं. ४ । १ । ८) इति, ‘स दाधार पृथिवीम्’ (तै. सं. ४ । १ । ८) इत्यादिश्च । अतः गामाविश्य च भूतानि चराचराणि धारयामि इति युक्तमुक्तम् ।
அவ்வாறே வேதமந்திரமும் கூறுகிறது. (“யேன த்யௌருக்ரா ப்ரதிவீ ச த்ருடா" எதனால் மேல் உலகமும் பாரமுள்ள பூலோகமும் திடமாக இருக்கிறதோ), என்றும் “ச தாதார ப்ருதிவீம்” = அது பூமியைத் தாங்குகிறது, என்பவை முதலியவைகளாலும், ஆகையால் பூமியில் நுழைந்து சராசரமான பூதங்களைத் திடமாகத் தாங்குகிறேன் என்று கூறியது பொருந்தும்.
किञ्च, पृथिव्यां जाताः ओषधीः सर्वाः व्रीहियवाद्याः पुष्णामि पुष्टिमतीः रसस्वादुमतीश्च करोमि सोमो भूत्वा रसात्मकः सोमः सन् रसात्मकः रसस्वभावः । सर्वरसानाम् आकरः सोमः । स हि सर्वरसात्मकः सर्वाः ओषधीः स्वात्मरसान् अनुप्रवेशयन् पुष्णाति ॥ १३ ॥
மேலும் பூமியில் விளையும் நெல் முதலிய தாவரங்களை எல்லாம் ரசத்தோடு கூடியுள்ள சந்திரன் வடிவமாகி வளமை உடையதாகவும் சுவை உள்ளதாகவும் செய்கிறேன். எது எல்லா ரசங்களுக்கும் ஆத்மாவாய் இருக்கிறதோ அதற்கு ரசமே ஸ்வபா வம். எல்லா ரசங்களுடைய இருப்பிடமாக சந்திரன் இருக்கிறது. அதுவே எல்லா ஸ்தாவரங்களிலும் தன்னுடைய ரச ரூபமாக பிரவேசித்து (நுழைந்து) அதை போஷிக்கிறது (வளரச்செய்கிறது).
किञ्च —
மேலும்
अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।
प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥ १४ ॥
அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாச்ரித: ।
ப்ராணாபான ஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம் ॥ 14 ॥
நானே வைச்வாநரன் என்னும் வயிற்றில் உள்ள அக்னியாக இருக்கிறேன். (““அயம் அக்னி வைச்வானரோ யோஅயமந்த: பருஷேயேன இதமன்னம் பக்யதே’’ = எந்த அக்னி வைச்வான ரனோ அந்த புருஷனின் உள்ளே இருந்துகொண்டு அன்னத்தைச் செரிக்கச் செய்கிறது) என்று ஸ்ருதிகளில் வர்ணனை செய்யபப்பட் டுள்ளது. வைச்வானரனாக இருந்துகொண்டு ஜீவர்களுடைய தேஹத்தில் இருந்துகொண்டு பிராண அபான வாயுக்களுடன் சேர்ந்து உண்ணுதல், கடித்து சாப்பிடுதல், பருகுதல், நக்குதல் என நான்கு விதமான அன்னத்தை செரிமானம் செய்கிறேன்.
‘भोक्ता वैश्वानरः अग्निः, अग्नेः भोज्यम् अन्नं सोमः, तदेतत् उभयम् अग्नीषोमौ सर्वम्’ इति पश्यतः अन्नदोषलेपः न भवति ॥ १४ ॥
போக்தா வைச்வானரன் என்னும் அக்னி. போஜ்யம் அன்னம் எனப்படும் சோமன். எவன் இந்த ஜகத்தை எல்லாம் அக்னி சோம ரூபமாகப் பார்க்கிறானோ அவனை அன்னதோஷமானது அண் டாது. (ஒட்டாது)
किञ्च —
மேலும்
सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥ १५ ॥
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த:ஸ்ம்ரு திர்ஜ்ஞானம்போஹனம் ச ।
வேதைஸ்ச ஸர்வைர்ரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத் வே தவிதேவ சாஹம் ॥ 15 ॥
सर्वस्य च प्राणिजातस्य अहम् आत्मा सन् हृदि बुद्धौ संनिविष्टः । अतः मत्तः आत्मनः सर्वप्राणिनां स्मृतिः ज्ञानं तदपोहनं च अपगमनं च ; येषां यथा पुण्यकर्मणां पुण्यकर्मानुरोधेन ज्ञानस्मृती भवतः, तथा पापकर्मणां पापकर्मानुरूपेण स्मृतिज्ञानयोः अपोहनं च अपायनम् अपगमनं च ।
நான் எல்லா ஜீவராசிகளின் அந்தக்கரணத்தில் ஆத்மாவாக இருக்கிறேன். ஆகையால் எல்லா பிராணிகளுடைய ஸ்மிருதி, ஞானம் அவைகளுடைய மறைவுகள், என்னுடைய ஆத்மாவி னால் உண்டாகின்றன. எவர்கள் புண்யகர்மா செய்தார்களோ அவர்களுடைய புண்யத்திற்கு தகுந்தவாறு ஞானமும், ஸ்மிருதியும் உண்டாகிறது. அவ்வாறே பாபகர்மங்கள் செய்தவர் களுக்கு பாபகர்மா அனுசரணையாக ஸ்மிருதியும், ஞானமும் லோபமடைகிறது. (மறைகிறது).
वेदैश्च सर्वैः अहमेव परमात्मा वेद्यः वेदितव्यः । वेदान्तकृत् वेदान्तार्थसम्प्रदायकृत् इत्यर्थः, वेदवित् वेदार्थवित् एव च अहम् ॥ १५ ॥
எல்லா வேதங்களாலும் பரமாத்மாவாகிய நானே அறியப்பட வேண்டியவன். நானே வேதாந்தத்திற்கு கர்த்தா என்றால் வேதாந்த அர்த்தத்துக்கு சம்பிரதாய கர்த்தா என்பது பொருள். நானே வேதாந்தத்தின் அர்த்தத்தை அறிந்தவன்.
பகவானாகிய நாராயணன் எனப்படும் ஈஸ்வரனுடைய உத்தம மான உபாதியினால் உண்டாகும் விபூதிகள் சுருக்கமாக "யதா ஆதித்ய கதம் தேஜ" என்பது முதலிய ஸ்லோகங்களால் கூறப்பட்டது.
अथ अधुना तस्यैव क्षराक्षरोपाधिप्रविभक्ततया निरुपाधिकस्य केवलस्य स्वरूपनिर्दिधारयिषया उत्तरे श्लोकाः आरभ्यन्ते । तत्र सर्वमेव अतीतानागताध्यायार्थजातं त्रिधा राशीकृत्य आह —
இப்பொழுது க்ஷரம் அக்ஷரம் என்ற இந்த உபாதிகளையும் தனித்தனியாகக் கூறி அந்த உபாதிகளற்ற அந்த சுத்த பரமார்த்த ஸ்வரூபத்தை இதுதான் என்று நிச்சயம் செய்வதற்காக இனிவரும் ஸ்லோகங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அவைகளில் முன்பு கூறப் பட்டனவும் இனி வரும் அத்தியாயங்களில் கூறப்போகிற எல்லா அர்த்தங்களையும் மூன்று விதமாகப் பிரித்துக் கூறுகிறார்.
द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च ।
क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ॥ १६ ॥
த் வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் சாக்ஷர ஏவ ச ।
க்ஷர: ஸர்வாணி பூதானி கூடஸ்தோ(அ)க்ஷர உச்யதே ॥ 16 ॥
द्वौ इमौ पृथग्राशीकृतौ पुरुषौ इति उच्येते लोके संसारे — क्षरश्च क्षरतीति क्षरः विनाशी इति एको राशिः ; अपरः पुरुषः अक्षरः तद्विपरीतः, भगवतः मायाशक्तिः, क्षराख्यस्य पुरुषस्य उत्पत्तिबीजम् अनेकसंसारिजन्तुकामकर्मादिसंस्काराश्रयः, अक्षरः पुरुषः उच्यते ।
இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்விரண்டும் சம்சாரத் தில் இருபுருஷர்கள் எனப்படுகின்றன. ஒன்று க்ஷரம், அது நாசமு டைய புருஷன். அதற்கு மாறான மற்றொரு புருஷன் நாசமற்ற வன், அக்ஷரபுருஷன் எனப்படுவான். அந்த அக்ஷர புருஷன் பக வானுடைய மாயாசக்தியாகிய க்ஷரம் எனப்படும் புருஷனுடைய உற்பத்திக்கு (பீஜம்) காரணமாகிய சம்சாரத்தில் உள்ள அநேக ஜீவர்களுடைய ஆசை, காமம் இவைகள் தங்குமிடம் அக்ஷர புரு ஷன் எனப்படுகிறான்.
कौ तौ पुरुषौ इति आह स्वयमेव भगवान् — क्षरः सर्वाणि भूतानि, समस्तं विकारजातम् इत्यर्थः । कूटस्थः कूटः राशी राशिरिव स्थितः । अथवा, कूटः माया वञ्चना जिह्मता कुटिलता इति पर्यायाः, अनेकमायावञ्चनादिप्रकारेण स्थितः कूटस्थः, संसारबीजानन्त्यात् न क्षरति इति अक्षरः उच्यते ॥ १६ ॥
அவ்விருபுருஷர்கள் யார் என்று பகவானே சுயமாகக் கூறுகிறார்- எல்லா விகார பொருள்களும் க்ஷரம் எனப்படும் புருஷன் கூடம் என்றால் குவியல் போல் இருப்பதால். அல்லது கூடம் என்றால் மாயை, வஞ்சனை, கோணல், வக்கிரம் என்பன ஒரு பொருள் சொற்கள். மாயை அநேகவிகாரமாக இருப்பதால் இவ்வாறு கூறப்பட்டது. இவ்வாறான கூடத்தில் இருப்பதால் கூடஸ்தன். சம்சாரத்தின் பீஜம் முடிவற்றிருப்பதால் அது நாசமடை வதில்லை. என்று அக்ஷரம் எனப்படுகிறது. (ஞானத்தால் மட்டுமே அழிவு உடையது)
आभ्यां क्षराक्षराभ्यां अन्यः विलक्षणः क्षराक्षरोपाधिद्वयदोषेण अस्पृष्टः नित्यशुद्धबुद्धमुक्तस्वभावः —
க்ஷரம் அக்ஷரம் இவை இரண்டைக் காட்டிலும் வேறானதா யும் க்ஷரம்,அக்ஷரம் என்ற உபாதிகளுடைய தோஷங்கள் அற்ற தாய் நித்ய சுத்த புத்த முக்த ஸ்வபாவமுடையது-
उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः ।
यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः ॥ १७ ॥
உத்தம: புருஷஸ்த் வந்ய: பரமாத் மேத் யுதா ஹ்ருத: ।
யோ லோகத்ரய மாவிச்ய பிபர்த்ய வ்யய ஈச்வர: ॥ 17 ॥
उत्तमः उत्कृष्टतमः पुरुषस्तु अन्यः अत्यन्तविलक्षणः आभ्यां परमात्मा इति परमश्च असौ देहाद्यविद्याकृतात्मभ्यः, आत्मा च सर्वभूतानां प्रत्यक्चेतनः, इत्यतः परमात्मा इति उदाहृतः उक्तः वेदान्तेषु ।
மிகவும் மேலான புருஷன் க்ஷரம், அக்ஷரம் எனப்படும் புரு ஷனைக் காட்டிலும் வேறானவன். அவனே பரமாத்மா. அந்த பர மாத்மா அவித்யையினால் உண்டான சரீராதிகளைக் காட்டிலும் மேலானது. மேலும் எல்லா ஜீவர்களுடைய அந்தராத்மாவாகவும் இருக்கிறது. ஆகையால் வேதாந்த வாக்கியங்களில் பரமாத்மா எனப்படுகிறான்.
स एव विशिष्यते
அதுவே சிறப்பாக கூறப்படுகிறது
यः लोकत्रयं भूर्भुवःस्वराख्यं स्वकीयया चैतन्यबलशक्त्या आविश्य प्रविश्य बिभर्ति स्वरूपसद्भावमात्रेण बिभर्ति धारयति ; अव्ययः न अस्य व्ययः विद्यते इति अव्ययः । कः ? ईश्वरः सर्वज्ञः नारायणाख्यः ईशनशीलः ॥ १७ ॥
நாசமற்றவரும் சர்வக்ஞருமாகிய நாராயணன் எனப்படும் எல்லோரையும் ஆக்ஞைக்கு உட்படுத்துபவர் தன்னுடைய சைதன்ய பல சாமர்த்தியத்தால் பூ: புவ, ஸ்வ: எனப்படும் மூவுலகி லும் பிரவேசித்து தன்னுடைய ஸ்வஸ்வரூப சத்பாவ மாத்திரத்தா லேயே தாங்குகிறார்.
यथाव्याख्यातस्य ईश्वरस्य ‘पुरुषोत्तमः’ इत्येतत् नाम प्रसिद्धम् । तस्य नामनिर्वचनप्रसिद्ध्या अर्थवत्त्वं नाम्नो दर्शयन् ‘निरतिशयः अहम् ईश्वरः’ इति आत्मानं दर्शयति भगवान् —
முன்பு வர்ணிக்கப்பட்ட ஈஸ்வரனுக்கு புருஷோத்தமன் என்றபெயர் பிரசித்தமாகும். அந்த பெயரை நன்றாக யுக்தியுடன் விளக்கி, அந்த பெயரின் அர்த்தமுள்ள தன்மையைக் காட்டி நான் மேலான ஈஸ்வரன் என்று பகவான் தன்னை உணர்த்துகிறார்.
यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः ।
अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः ॥ १८ ॥
யஸ்மாத்க்ஷரமத்தோஅஹமக்ஷராதபி சோத்தம: ।
அதோஅஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம: ॥ 18 ॥
यस्मात् क्षरम् अतीतः अहं संसारमायावृक्षम् अश्वत्थाख्यम् अतिक्रान्तः अहम् अक्षरादपि संसारमायारूपवृक्षबीजभूतादपि च उत्तमः उत्कृष्टतमः ऊर्ध्वतमो वा, अतः ताभ्यां क्षराक्षराभ्याम् उत्तमत्वात् अस्मि लोके वेदे च प्रथितः प्रख्यातः । पुरुषोत्तमः इत्येवं मां भक्तजनाः विदुः । कवयः काव्यादिषु च इदं नाम निबध्नन्ति । पुरुषोत्तम इत्यनेनाभिधानेनाभिगृणन्ति ॥ १८ ॥
எதனால் க்ஷரம் ஆகிய அச்வத்தம் எனப்படும் சம்சார விரு க்ஷத்தை நான் கடந்தவன். அவ்வாறேஅக்ஷரமாகிய சம்சார விருக்ஷ பீஜ ஸ்வரூபத்தைக் காட்டிலும் மிகவும் மேலானவன் அல்லது அதற்கு மேலே உள்ளவன். ஆகையால் க்ஷரம், அக்ஷரத் தைக் காட்டிலும் மேலானவனாக இருக்கிறேன். ஆகையால் உல கத்திலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்ற நாமத்தில் கூறப்பட் டுள்ளது. பக்தர்கள் என்னை இவ்வாறு அறிகிறார்கள். கவிகள் காவியங்களில் இந்த புருஷோத்தமன் என்ற பெயரை உபயோகிக் கிறார்கள். இந்தப் பெயரால் என்னை வர்ணனை செய்கிறார்கள்.
अथ इदानीं यथानिरुक्तम् आत्मानं यो वेद, तस्य इदं फलम् उच्यते —
இனி இப்பொழுது முன்பு வர்ணிக்கப்பட்ட ஆத்மாவை எவன் அறிகிறானோ அவனுடைய பலத்தைக் கூறுகிறார்-
यो मामेवमसंमूढो जानाति पुरुषोत्तमम् ।
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ॥ १९ ॥
யோ மாமேவமஸம்மூடோ ஜானாதி புருஷோத்தமம் ।
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேன் பாரத ॥ 19 ॥
यः माम् ईश्वरं यथोक्तविशेषणम् एवं यथोक्तेन प्रकारेण असंमूढः संमोहवर्जितः सन् जानाति ‘अयम् अहम् अस्मि’ इति पुरुषोत्तमं सः सर्ववित् सर्वात्मना सर्वं वेत्तीति सर्वज्ञः सर्वभूतस्थं भजति मां सर्वभावेन सर्वात्मतया हे भारत ॥ १९ ॥
எவன் முன்பு கூறப்பட்ட விசேஷங்களுடைய ஈச்வரனாகிய என்னை முன்பு கூறியவாறு மோஹமற்றவனாய் இருந்துகொண்டு எல்லாம் அறிந்த சர்வக்ஞனாகிய புருஷோத்தமன் என்றும், எல்லா ஜீவர்களிடத்தும் உள்ளவன் என்றும் சர்வாத்ம பாவனை யால் என்னைத் தொழுகிறானோ. புருஷோத்தமனாகிய என்னை எவன் நான் என்று அறிகிறானோ அவன் ஸர்வவித், ஸர்வான்ம ரூபமாய் எவன் அறிகிறானோ அவன் ஸர்வக்ஞன்.
अस्मिन् अध्याये भगवत्तत्त्वज्ञानं मोक्षफलम् उक्त्वा,अथ इदानीं तत् स्तौति —
இந்த அத்யாயத்தில் பகவானுடைய தத்துவ ஞானத்தையும் மோக்ஷபலத்தையும் கூறி அதன் பின் இப்பொழுது அதை ஸ்துதி செய்கிறார்-
इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयानघ ।
एतद्बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत ॥ २० ॥
இதி குஹ்யதமம் சாஸ்த்ரமிதமுக்தம் மயாநக ।
ஏதத்புத்த்வா புத்திமான்ஸ்யாத்க்ருதக்ருத்யச்ச பாரத ॥ 20 ॥
इति एतत् गुह्यतमं गोप्यतमम् , अत्यन्तरहस्यं इत्येतत् । किं तत् ? शास्त्रम् ।
இது எல்லாவற்றையும் விட மிகவும் ரஹஸ்யமானது. அது யாது? அது சாஸ்திரம்.
அது சாஸ்திரம். கீதை எனப்படுவது முழுவதும் சாஸ்திரம் என்று கூறப்பட்டாலும் இந்த அத்யாயத்தை ஸ்துதி செய்வதன் பொருட்டு அந்த அத்யாயத்தை சாஸ்திரம் என்று கூறப்பட்டது. இக்கீதா சாஸ்திர விஷயமனைத்தும் இவ்வத்தியாயத்தில் சுருக்க மாகக் கூறப்பட்டுள்ளது. மற்றும் எல்லா கீதா சாஸ்திரத்தின் அர்த் தம் மட்டும் கூறப்படவில்லை. எல்லா வேதார்த்தத்தின் முடிவும் கூறப்பட்டுள்ளது. யஸ்தம் வேத ஸ வேதவித், வேதைச்ச ஸர்வை ரஹமேவ வேத்ய: எவன் அதை அறிந்தானோ அவன் வேதவித், எல்லா வேதங்களினாலும் அறியவேண்டியது நானே.
इदम् उक्तं कथितं मया हे अनघ अपाप । एतत् शास्त्रं यथादर्शितार्थं बुद्ध्वा बुद्धिमान् स्यात् भवेत् न अन्यथा कृतकृत्यश्च भारत ।
ஹே பாபமற்ற அர்ஜுனனே! என்னால் இது கூறப்பட்டுள்ளது. இந்த சாஸ்திரத்தில் எவ்வாறு உணர்த்தப்பட்டதோ அவ்வாறு அறிந்து புத்திமான் (ஞானி) ஆவாய். ஹே பாரத! இதை விட வேறு செய்யப்பட வேண்டியது ஒன்றுமில்லை. (கிருதகிருத்யத்துவம் இல்லை)
कृतं कृत्यं कर्तव्यं येन सः कृतकृत्यः ; विशिष्टजन्मप्रसूतेन ब्राह्मणेन यत् कर्तव्यं तत् सर्वं भगवत्तत्त्वे विदिते कृतं भवेत् इत्यर्थः ; न च अन्यथा कर्तव्यं परिसमाप्यते कस्यचित् इत्यभिप्रायः ।
செய்யப்படவேண்டியது எல்லாவற்றையும் செய்து முடித்தல் கிருதக்ருத்யமாகும். மேன்மையான ஜன்மத்தில் பிறந்தவனான பிராஹ்மணன் எது செய்யப்படவேண்டியதோ அது எல்லாம் பகவானது தத்துவத்தை அறிந்து செய்யப்பட்டதாகும் என்பது பொருள். வேறு விதமாக செய்யப்பட்ட கர்த்திருத்துவம் முடிவுடையதாகாது.
"சர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிஸமாப்யதே" = ஹே பார்த்த, எல்லா கர்மங்களும் ஞானத்தில் முடிவடைகிறது என்று கூறப்பட்டது.
‘एतद्धि जन्मसामग्र्यं ब्राह्मणस्य विशेषतः ।
प्राप्यैतत्कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा’
(मनु. १२ । ९३) इति च मानवं वचनम् ।
(ஏதத்தி ஜன்மஸாமக்ரயம் ப்ராஹ்மணஸ்ய விசேஷத: ப்ராப்யைதத்க்ருத க்ருத்யோ ஹித்விஜோ பவதி நாந்யதா)
அர்த்தம்- சிறப்பான (மேலான) ப்ராஹ்மண ஜன்மமானது பூர் ணமானது. ஏனெனில் இதை அடைந்து பிராஹ்ம்மணன் க்ருதக் ருத்யன் ஆகிறான். மற்றப்ரகாரமாக அல்ல. என்பது மனுவினு டைய வசனம்.
यतः एतत् परमार्थतत्त्वं मत्तः श्रुतवान् असि, अतः कृतार्थः त्वं भारत इति ॥ २० ॥
ஹே பாரத! எந்த இந்த பரமார்த்த தத்துவமானது என்னிடமி ருந்து கேட்டவனாய் இருக்கிறாயோ அதனால் நீ க்ருதார்த்தனாய் இருக்கிறாய்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये पञ्चदशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே புருஷார்த்தம யோகோ நாம பஞ்சதசோத்யாய: